கருவறை

ஏகாம்பரநாதர் கோயில்
எள்கலின்றி இமையவர் கோனை ஈசனைவழி பாடுசெய் வாள்போல்
உள்ளாத்துள்கி உகந்துமை நங்கை வழிபடச் சென்று நின்றாவா கண்டு
வெள்ளங் காட்டி வெருட்டிட வஞ்சி வெருவியோடித் தழுவ வெளிப்பட்டதிரு
கள்ளக் கமபனை எங்கள் பிரானைக் காணக்கண் அடியேன் பெற்றவாறே

- சுந்தரர் தேவாரம்      


ஆலயச் சிறப்பு

முக்தி நகரேழில் முக்கியமானதும், நகரேஷு காஞ்சி என்று காளிதாசனால் சிறப்பிக்கப்பட்டதும், திருமேற்றளியில் கல்வியைக் கரையிலா காஞ்சி என்று அப்பர் பெருமானால் புகழ்ந்தேத்தப்பட்டதுமான திருக்கச்சியம்பதியில். பஞ்சபூதத் தலங்களுள் பிருதிவித் தலம் என்று வியாச முனிவரால் சிவபுராணத்தில் அருளப்பட்டுள்ளதும், சரிகாற்சோழன் திருப்பணி செய்த பெருமையுடையதும், ஐயடிகள் காடவர்கோன். சாக்கிய நாயனார், திருக்குறிப்புத் தொண்டர் ஆகியோர் வணாங்கி முக்திபெற்ற சிறப்புடையதும், நால்வரால் பாடப்பெற்ற பெருமையுடையதும், சுந்தரர் வணங்கி இடக்கண் பெற்றதும், அருணகிரியார்.பட்டிணத்தடிகள். இரட்டைப் புலவர் ஆகியோர் பாடல்பெற்றதுமான சிறாப்பான தலம் ஏகாம்பரநாதர் திருக்கோவிலாகும்.

கயிலையில் இறைவனின் திருக்கண்களை மூடியதால் ஏற்பட்ட பாவம் நீங்க, பார்வதி தேவி கச்சியம்பதிக்கு எழுந்தருளி, கம்பையாற்றின் கரையில் ஏகாம்பரத்தின் நிழலில் (ஏகம் - ஒன்று. ஆம்ரம் - மாமரம். ஏகம்+ஆம்ரம்=ஏகாம்பரம்) மணலில் இலிங்கம் பிடித்து வழிபட்டு. பாவம் நீங்கி, பொன்னிறம் பெற்று, இறைவனைத் திருமணஞ் செய்த பெருமையுடையது இத்தலம். காஞ்சியில் குமரன் எழுந்தருளியுள்ள தலம் குமரக்கோட்டம் எனவும், காளி எழுந்தருளியுள்ள தலம் காளிக்கோட்டம் எனவும், காமாட்சி தேவி எழந்தருளியுள்ள தலம் காமக்கோட்டம் எனவும் வழங்குவது போல் இத்தலமானது ருத்திரக்கோட்டம் எனச் சிறாப்பிக்கப்படுகிறது. சிவபெருமான் பஞ்ச சபைகளில் பஞ்சநடனம் புரிந்த பெருஞ்சிறப்பைப்போல் இத்திருவேகம்பத்தில் உயிர்களைக் காக்கும் பொருட்டு ரக்ஷா நடனம் செய்தருளினார்.

இத்தகைய புராணச்சிறப்பும், வரலாற்றுச்சிறப்பும் வாய்ந்த இத்தலத்திற்குக் கரிகாற்சோழன், இரண்டாம் இராசராசன், மூன்றாம் குலோத்துங்கள், விஜயநகர மன்னர்கள் ஆகியோர் திருப்பணிகள் பல செய்துள்ளானர். தற்காலத்தில் சன்னிதிகள் மற்றும் விமானங்கள் திருப்பணி செய்யப்பட்டு கடந்த 1-2-1979 அன்று திருக்குடமுழுக்கு நடைபெற்றது. அதன் பிறகு இராஜகோபுரத் திருப்பணி செய்யப்பட்டு கடந்த 9-2-1992 அன்று இராஜகோபுரத்திற்கு மட்டும் திருக்குடமுழுக்கு செய்யப்பட்டது. அதன் பிறகு பதினான்கு ஆண்டுகள் கழித்து அனைத்து சன்னிதிகள், விமானங்கள் மற்றும் கோபுரங்கள் முழுவதுமாக சுமார் இரண்டு கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டு, கடந்த 31-8-2006 அன்று திருக்குடமுழுக்கு சிறாப்பாக நடைபெற்றது.

அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம்

கருவுற்ற நாள்முதலாக உன்பாதமே காண்பதற்கு
உருகிற்று என்உள்ளமும் நானும் கிடந்து அலந்து எய்த்துஒழிந்தேன்
திருஒற்றியூரா, திருவாலாவாயா, திருவாரூரா,
ஒருபற்றிலாமையும் கண்டிரங்காய் கச்சி ஏகம்பனே. - அப்பர் தேவாரம்

முதன்மையாய், தென்னிந்தியாவின் தனித்தலமாய் விளங்குவதும், நகரேஷூ காஞ்சி எனப்புகழப் படுவதும், தீய என்பன கனவிலும் நினைவிலாச் சிந்தைத் தூய மாந்தர்வாழ் தொண்டை நாட்டின் தலைநகராய் விளங்குவதும்..

எம்பிராட்டி இவ்வேமுலகு ஈன்றவள்
தம்பிரானைத் தனித் தவத்தால் எய்திக்
கம்பையாற்றில் வழிபாடு காஞ்சி என்று
உம்பர் போற்றும் பதிஉடையது.

என்று சேக்கிழார் பெரியபுராணத்தில் பாராட்டப்பெறுவதுமாகிய காஞ்சி மாநகரில் பெரிய கோவிலாய் விளங்குவதும், முப்பத்திரண்டு அறாங்களை வளர்த்த அன்னை காமாக்ஷி வழிபட்டதும், மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் மூன்றும் சிறப்புடன் அமைந்ததும் ஆன திருக்கோவில் திருவேகம்பர் திருக்கோவில். புராணம், சரித்திரம், சிற்பம் ஆகிய சிறப்புக்களைக் கொண்டது இத்திருக்கோவில் ஆகும். இத்திருக்கோவில் இந்து அறாநிலையத் ஆட்சித்துறையின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

ஸ்ரீ ஏகாம்பரநாதர் ஆலய அமைப்பு

ஏகாம்பரநாதர் ஆலயம்


இராஜகோபுரம்
முக்தித் தலங்கள் ஏழனுள் ஒன்று காஞ்சிபுரமாகும். நான்கு வேதங்களும் மா உருவாக பூசித்த தலம் கச்சி ஏகம்பமாகும். ஸ்ரீ சங்கர மடத்தின் அருகிலும், பேருந்து நிலையத்திலிருந்து 1-1/2 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது திருவேகம்பம். பஞ்சபூதத் தலங்களுள் மண்ணாக (பிருத்திவி) அருள் பாலிக்கும் ஆலயம் இதுவே. ஏலவார்குழலி உடனாகிய திருவேகம்பப் பெருமான் ஒற்றை மாவடியின் கீழ் எழுந்தருளி இவ்வுலகைக் காத்து வருகிறார்.

இவ்வாலயத்தின் இராஜகோபுரம் 192 அடி உயரமுடையது. கோபுரத்தில் ஒன்பது நிலைகள் உள்ளன. கிருஷ்ணதேவராயர் காலத்தில் கி.பி. 1509ஆம் ஆண்டு இக்கோபுரம் கட்டப்பட்டது. கோபுரத்தின் கீழே மேற்குப் பக்கத்தில் ஆறுமுகப் பெருமானும், கிழக்குப் பக்கத்தில் விநாயகரும் மிகப்பெரிய உருவில் இருந்து அருள் பாலிப்பது வேறு எந்த ஆலயத்திலும் காண முடியாது.

இராஜகோபுரத்தின் உள்ளே சென்றதும் நம்மை வரவேற்பது சரபேஸ்வரர் மண்டபம் என வழங்கப்படும் வாஹன மண்டபம் ஆகும்.

இடது பக்கமாக கம்பா தீர்த்தம் அமைந்துள்ளது. கங்கை, யமுனா, சரசுவதி ஆகிய நதிகளில் நீராடிய புண்ணியம் இத்தீர்த்தத்தில் கிடைக்கிறது.

அதற்கடுத்து ஆயிரங்கால் மண்டபத்தில் சில தூண்கள் இல்லையென்றாலும் ஸ்ரீ ஜயேந்திர சுவாமிகள் அருளால் மிகத் தூய்மையாகப் பாதுகாக்கப்பட்டு ஆன்மீக நிகழ்ச்சிகள், ஆகம வகுப்புகள் இங்கே நடைபெற்று வருகின்றன.

அடுத்து விகட சங்கர விநாயகர் சந்நதி இருக்கிறது. இங்குதான் இரட்டைப் புலவர்களால் மிகப்பெருமைவாய்ந்த திருவேகம்ப நாதர் உலா பாடப்பட்டது.

கொடிக்கம்பத்தின் அருகில் மேற்குப் பார்த்த சந்நிதி திருக்கச்சி மயானம் ஆகும். இதற்கு எதிரில் வள்ளல் பச்சையப்ப முதலியார் அவர்களால் 16 தூண்களை உடைய கல்யாண மண்டபம் நிறுவப்பட்டுள்ளது. கொடிக்கம்பத்திற்கு வடக்கில் சிவகங்கை தீர்த்தம்அமைந்துள்ளது. இவ்வாலயத்துள் நல்லகம்பர், வெள்ளக்கம்பர், கள்ளக்கம்பர், கச்சிமயானம், வாலீச்சுரம் எனும் ஐந்து தலகள் உள்ளன. இவை முறையே ருத்ரன், பிரம்மா, விஷ்ணு, பண்டாசூரன், வாலி பூசித்தவையாகும்.

நவராத்திரி காலங்களில், மக்களால் சிறப்பாக அபிஷேக ஆராதனைகளுடன் விளங்கும் பிரளயகால சக்தி சந்நிதி அமைந்துள்ளது. உலக அழிவின்போது மக்களைக் காத்து இரட்சித்த அம்பாளாகையால் இந்த அம்பாளுக்குப் பிரளயகால அம்மன் எனப் பெயர் வழங்கப்படுகிறது.

ஆதையடுத்து பிரகாரத்தில் பஞ்சமுக விநாயகர் அருள்பாலிக்கிறார். அதற்கருகில் 108 தனி லிங்கங்களும், ஒரே லிங்கத்தில் 1008 சஹஸ்ரலிங்க சந்நதியும் அமைந்துள்ளன. சஹஸ்ரலிங்கத்துக்குப் பால் அபிஷேகம் செய்தால் நினைத்தது நடக்கும்! கேட்டது கிடைக்கும்!

ஏகாம்பரநாதர் ஆலயத்துள் தட்சணாமூர்த்தி சந்நிதி கிடையாது. இவ்வாலயத்திற்கே சிறப்புத் தரும் பெரிய ஆலமரம் ஒன்று சந்நிதிக்குப் பின்புறம் உள்ளது. 3500 ஆண்டுகளுக்கு முற்பட்ட இம்மாமரத்தை ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் வழிபட்டதாக வரலாறு!

மாவடியின் கீழ் ஆறுமுகப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் மயில் மேல் அமர்ந்து அருள்பாலிக்கிறார். பங்குனி உத்திரப் பெருவிழாவில் சுவாமி திருக்கல்யாணத்தின்போது மாவடியின் கீழே ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான ஜோடிகளுக்குத் திருமணம் நடைபெறக் காண்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.

அம்பலவாணர் (நடராஜர்) சந்நிதி இங்கு உள்ளது. நடராஜர் உருவம் ஐம்பொன்னால் ஆகிய மிகப்பெரிய திருமேனியாகும். ஆலயத்தின் உள்ளே ஏலவார்குழலியாகிய அம்பிகை இறைவனை அடையும் பொருட்டு கம்பா நதியில் மணலால் லிங்கம் உருவாக்கி, தவம் செய்து வழிபட்டாள். அப்போது இறைவன் கம்பா நதியில் வெள்ளப்பெருக்கை உருவாக்க, அம்பிகை பயந்து மணல் லிங்கத்தை மார்புரத் தழுவினாள் என்பது வரலாறு.

எனவே இன்றும் அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையார்க்கே நடைபெறுகின்றன. மணல் லிங்கமாக எழுந்தருளியிருக்கும் திருவேகம்பப் பெருமானுக்குச் சாந்து சாத்தித்தான் இன்னமும் வழிபாடு நடைபெறுகிறது.

ஆலயத்தின் பிர்காரத்தில் நிலாத்திங்கள் துண்டப் பெருமாள்சந்நிதி இருக்கிறது. மூலவருக்கு நிலாத் திங்கள் துண்டத்தான், சந்திர சூடப்பெருமாள் எனத் திருநாமங்கள் உண்டு. சந்திர புஷ்கரணி தீர்த்தத்தை உடைய இங்கு வீற்றிருக்கும் தாயருக்கு நேர் ஒருவரில்லா வள்ளி, நிலாத் திங்கள் துண்டத் தாயார் எனப் பெயர்கள் வழங்குகின்றன. பார்வதி தவத்தைச் சோதிக்க சிவபெருமான் மாமரத்தை எரித்தார். அன்னை தன் தங்கையின் பொருட்டு மாமரத்தைத் தழைக்கச் செய்தார். அவள் தாபத்தைத் துண்டித்தபடியால் நிலாத்திங்கள் துண்டத்தான் என்ற பெயர் வழங்கலாயிற்று.

இரு விழிகளை இழந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் இவ்வாலயத்திற்கு வந்து இடக்கண் பெற்றார். நாயன்மார் மூவராலும் பட்டிணத்து சுவாமிகளாலும் பாடல் பெற்ற தலமாகும். இவ்வாலயத்தில் பங்குனி உத்திரப் பெருவிழா வெகு சிறப்பாக நடைபெறுகிறது.

23.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள திருவேகம்பநாதர் ஆலயத்தில் ஐந்து பிரகாரங்கள் உள்ளன.

ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெண் உருவானாய் போற்றி

என்று வழிபட்டு வருவோர்க்கு வாழ்வு என்றும் நிறைவாகும்.

தொகுத்தளித்தவர் புலவர் த.கு.ப.

Post your comments to Facebook